காப்பியம்-அறிமுகம் 
இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.
    தமிழ் இலக்கிய வரலாற்றில் 
                வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய 
                எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு 
                முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் 
                தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே 
                சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் 
                எழுதப்பட்டுள்ளன.
 காப்பியம்
              
     காப்பியம் என்றால் 
                என்ன? இந்தச் சொல்லின் பொருள் என்ன? இச்சொல் விளக்கும் இலக்கியம் 
                எத்தகையது? ஒருவகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவை கதைப்பாடல்கள் 
                என்பதை நாம் அறிவோம். இன்னொரு நிலையில் ‘காப்பியம்’ என்றால் என்ன? 
                இந்தச் சொல் எங்கிருந்தது வந்தது? இதன் அடிப்படைப் பொருள் யாது? 
                இதற்கு விடை காண்பதே நமது நோக்கம்.
● சொல் விளக்கம்
     வடமொழியில் ‘காவ்யா’ என்றால் 
                பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் ‘காவியமே’. 
                எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர். தமிழில் தொல்காப்பியம், 
                காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், 
                காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை 
                காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் 
                காப்பது ‘காப்பியம்’ எனக் கருத இடம் உண்டு. காப்பியம் என்ற இலக்கியமே, 
                வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக - சமய - அரசியல் வரலாற்றையோ அல்லது 
                வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி 
                மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு 
                முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை 
                பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் 
                தொகுக்கப் பட்டன. 
     ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் 
                ‘epo’ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது; ‘epo’ 
                என்றால் ‘to tell’ என்றும், ‘epos’ என்றால் ‘anything to tell’ என்றும் 
                பொருள்படும். எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது 
                என்பது பொருளாகிறது. இவ்வகையில் காப்பியம் என்பதும் பழமரபுகளைக் 
                காத்து இயம்புவது அதாவது ‘சொல்லப்பட்டு வருவது’ என்பது விளங்குகிறது 
                அல்லவா?
காப்பிய வகை
    காப்பியம் என்றாலே தமிழர்களுக்குச் சிலப்பதிகாரம், 
சிந்தாமணி முதலான ஐம்பெருங் காப்பியங்களும் - ஐஞ்சிறு 
காப்பியங்களுமே  நினைவுக்கு  வரும்.  தொடர்ந்து 
பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான 
பலவும் நம் நினைவுக்கு வருவதுண்டு. 20-ஆம் நூற்றாண்டில் 
பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் பாண்டியன் 
பரிசு, புலவர் குழந்தையின் இராவண காவியம், 
கண்ணதாசனின்  ஏசு  காவியம்  போன்றனவும் 
காப்பியங்களாகவே எண்ணப்படுகின்றன. எனவே காப்பியம் 
என்ற இலக்கிய வகையைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது 
அவசியமாகிறது.
1.2.1 மேலை இலக்கியக் காப்பிய வகை
    கிரேக்கம், இலத்தீன், பாபிலோனியம் முதலான பழமை 
வாய்ந்த மொழிகளில் எழுந்துள்ள காப்பியங்களைப் பின் 
வருமாறு வகைப் படுத்துகின்றனர்.
1) முன்முறைக் காப்பியம் (Primitive or Oral Epic)
2) வழிமுறை அல்லது கலைக் காப்பியம்
(Secondary or Literary Epic)
3) வீரயுகக் காப்பியம் (Chivalric Epic)
4) வீரயுகக் காதல் காப்பியம் (Chivalric Romance)
5) காதல் காப்பியம் (Romantic Epic)
6) நகைச்சுவைக் காப்பியம் (Burlesque Epic)
    கலைத் தன்மை பெறாத - அதே நேரத்தில் உணர்ச்சிப் 
பெருக்காகக் கவிஞனால் தங்கு தடையின்றி வாய்மொழி மரபில் 
பாடப்பட்டுவருவன முன்முறைக் காப்பியம். 
    இதனை அடுத்துத் தோன்றுவன கலைக்காப்பியம். 
இவற்றில் கவிஞனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் இடம் 
உண்டு. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தியல் 
இவ்வகைப் படைப்புகளில் சிறப்பான இடத்தைப் பெறும்.
    வீரயுகக் காப்பியங்களில் வீரதீரச் செயல்கள், அற்புத 
ஆற்றல்கள், உணர்ச்சி பூர்வமாக மிகையான கற்பனையுடன் 
வெளியிடப் பெறும்.
    வீரயுகக் காதல் காப்பியங்களில் காதல், காதலுக்காகப் 
போராடும் மிகப்பெரிய போராட்டம் முதன்மைப் படுத்தப் 
பெறும்.
    நகைச்சுவைக் காப்பியங்களில் கிண்டலும் கேலியும் 
நிறைந்து, தன்னேரில்லாத் தலைவனாக உருவகப் படுத்தப்பட்ட 
காப்பியத்தலைவன்; இங்குக் கிண்டலுக்கும் கேலிக்கும் 
உரியவனாக, ஆளுமையில் தரம் தாழ்ந்தவனாகச் சித்திரிக்கப் 
படுவான்.
1.2.2 வடமொழியில் காப்பிய வகை
    வடமொழியில் காப்பியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப் 
பெறுகின்றன.
     1) இதிகாசம்
2) மகாகாவியம்
3) காவியம்
4) புராண காவியம்
5) உத்பாத்தியம்
6) சம்பு காவியம்
7) சந்தேச காவியம்
8) கண்ட காவியம்
2) மகாகாவியம்
3) காவியம்
4) புராண காவியம்
5) உத்பாத்தியம்
6) சம்பு காவியம்
7) சந்தேச காவியம்
8) கண்ட காவியம்
இதிகாசம் என்ற சொல்லுக்கு ‘இவ்வாறு முன் இருந்தது’ என்று 
பொருள். இதிகாசங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறாக 
(Pre-historic Period) நம்பப் படுவன. வால்மீகி ராமாயணமும், 
வியாச பாரதமும் இவ்வகைப் படைப்புகளே. வடமொழியின் 
மகாகாவியம் என்பது இதிகாசக் கதையின் ஒரு பகுதியை 
எடுத்துக் கொண்டு, விரிவாகப் பேசுவது. இதில் அறம், 
பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நாற்பொருள் இடம் பெறும். 
கற்பனை வளமும் வருணனைத் திறனும் பெற்றிருக்கும். மகா 
காவியத்திலிருந்து  அளவால்  குறைந்தது  காவியம். 
நாற்பொருளும் இதில் இடம் பெறாது. ஒரு சில குறைந்து 
அமையும். உயரிய நோக்கமும் கற்பனை வளமும் குறைவாகவே 
காணப்படும். கடவுளர் பற்றிய புராண வரலாறாக அமைவது 
புராண காவியம். இதிகாசத்திலோ, புராணங்களிலோ இடம் 
பெறாத, புதிய கதையை மையமாகக் கொண்டு படைக்கப் 
பெறுவன உத்பாத்தியம் என்னும் காப்பிய வகையாகும். 
சம்புகாவியம் என்பது உரையிடை இட்ட பாட்டுடைச் 
செய்யுளாகும். சந்தேச காவியம் என்பது தூது இலக்கிய 
வகையாகும். கண்ட காவியம் என்பது பழைய இதிகாச - 
காப்பியக் கதையை எடுத்துக் கொண்டு, கால வேறுபாட்டிற்கு 
ஏற்ப மாற்றங்களையும், புதுமைகளையும் சேர்த்துப் படைக்கப் 
பெறுவது. தமிழில் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் 
காப்பியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை 
போன்றவை இக்கண்ட காவிய வகையைச் சார்ந்தவை. 
1.2.3 தமிழில் காப்பிய வகை
    தமிழ்க் காப்பியம் என்றாலே நமக்கு நினைவுக்கு 
வருவன ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் 
என்பனவே. கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்ற 
ஒரு மிகச் சிறந்த காப்பியமும் உள்ளது. பெரியபுராணம், 
கம்பராமாயணம், வில்லிபாரதம் என்பனவும் தமிழில் தோன்றிய 
மிகச் சிறந்த காப்பியப் படைப்புகளே. இருபதாம் 
நூற்றாண்டிலும் காப்பியம் என்ற பெயரில் பல படைப்புகள் 
வெளி வந்துள்ளன. இவற்றைப் பின்வரும் வகைப்பாடுகளில் 
பகுத்துக் காணலாம்.
    1) இதிகாசம் 
2) புராணம்
3) பெருங்காப்பியம்
4) சிறுகாப்பியம்
5) மறைந்துபோன தமிழ்க் காப்பியம்
6) மொழிபெயர்ப்புக் காப்பியம்
7) இசுலாமிய சமயக் காப்பியம்
8) கிறித்தவ சமயக் காப்பியம்
9) தற்காலக் காப்பியம் - மற்றும் கதைப் பாடல்கள்
2) புராணம்
3) பெருங்காப்பியம்
4) சிறுகாப்பியம்
5) மறைந்துபோன தமிழ்க் காப்பியம்
6) மொழிபெயர்ப்புக் காப்பியம்
7) இசுலாமிய சமயக் காப்பியம்
8) கிறித்தவ சமயக் காப்பியம்
9) தற்காலக் காப்பியம் - மற்றும் கதைப் பாடல்கள்
    கம்பராமாயணமும் வில்லிபாரதமும் தமிழில் இதிகாசக் 
காப்பியங்களாகும். ஆனால் இவை இதிகாசத் தன்மையான 
வாய்மொழி  மரபோ,  உணர்ச்சியோ  இன்றிக் 
கலைத்தன்மையோடு; கற்பனை வளமும், கருத்தியல் புனைவும் 
கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால், இவை மேலை 
இலக்கியக் கலைக்காப்பியம் என்ற வகையைச் சார்ந்தன 
எனலாம்.
    தமிழில் புராணக் காப்பியங்கள் மூன்று வகையாகப் 
படைக்கப் பட்டுள்ளன. ஒன்று, கந்தபுராணம் போன்ற 
கடவுளர் பற்றிய புராணக் காப்பியம். இரண்டாவது வகை 
திருவிளையாடல் புராணம் போன்ற கடவுளர் பற்றிய 
தலபுராணம். மூன்றாவது வகையைச் சார்ந்தவை மாமனிதர் 
பற்றிய பெரியபுராணம் போன்றவை ஆகும். 
    சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, 
வளையாபதி, குண்டலகேசி ஆகியன பெருங்காப்பியங்கள் 
என்றும்; உதயண குமார காவியம், நாககுமார காவியம், 
யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன சிறு 
காப்பியங்கள் என்றும் எண்ணப்படுகின்றன. 
    சமயப் போராட்டங்கள், மக்களின் கவனிப்பு இன்மை 
முதலான காரணங்களால் அழிந்து போன தமிழ்க் காப்பியங்கள் 
பல. உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சில 
காப்பியங்களில்  தகடூர் யாத்திரை, வளையாபதி, 
குண்டலகேசி, விம்பசார கதை, சாந்தி புராணம், நாரத 
சரிதை, கலியாணன் கதை, பருப்பதம், புராண சாகரம், 
அமிர்தபதி, பிங்கல கேசி, அஞ்சனகேசி, காலகேசி, 
இராசராச விசயம், வீரணுக்க சரிதம், குலோத்துங்க 
சோழன் சரிதை முதலான காப்பியங்களின் பெயர்கள் 
அறியப்படுகின்றன.
    நச்சினார்க்கினியர்  உரையிலும்,  புறத்திரட்டிலும் 
காணப்படும் இராமாயணச் செய்யுள்கள்; பெருந்தேவனார் 
குறிப்பிடும் இராமாயண வெண்பா; யாப்பருங்கலத்திலும், 
வீரசோழியத்திலும் மேற்கோள் காட்டப்படும் வெண்பாவில் 
அமைந்த இராமாயணச் செய்யுள்கள்; புராணம் குறிப்பிடும் 
சைன ராமாயணம்; பல திரட்டு என்னும் சுவடித் தொகுப்பில் 
உள்ள நான்கு இராமாயண வெண்பாக்கள் இவற்றின் மூல 
நூல்கள் அழிந்து போய்விட்டன.
    இதே போன்று சங்ககாலம் தொட்டுப் பாரதக் கதை 
தொடர்பான பல காப்பியங்கள் எழுந்துள்ளன. சின்னமனூர்ச் 
செப்பேடு “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் 
வைத்தும்” எனச் சங்க காலத்ததான ஒரு பாரதம் பற்றிக் 
குறிப்பிடுகிறது. அடுத்தது பெருந்தேவனார் பாடிய பாரதம். 
வத்சராசன் பாரதம் அல்லது அருணிலை விசாகன் பாரதம் 
என்ற ஒரு பாரத நூலும் குறிப்பிடப் படுகின்றது. இவை 
அனைத்தும் மறைந்து போயின.
    தமிழில் பல தழுவல் காப்பியங்கள் எழுந்துள்ளன. 
இத்தகைய  தழுவலன்றி  மொழிபெயர்ப்பாகவும் பல 
எழுந்துள்ளன. மனுசரிதை, வசுசரிதை, பிரபுலிங்க லீலை, 
வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியாரின் துறக்க நீக்கம் 
(மில்டனின் Paradise Lost), அனந்த நாராயணரின் இலியதம் 
(ஹோமர்), அ. சிங்கார வேலுவின் ஒதீசியம் (ஹோமர்), 
ஜமதக்னியின் மொழிபெயர்ப்பான இரகுவம்சம், குமார 
சம்பவம், மேக சந்தேசம் (காளிதாசர்), ஆதி வரகவி மொழி 
பெயர்த்த காதம்பரி ஆகியன இவ்வகையில் குறிப்பிடத் 
தக்கன. 
    இசுலாமியக் காப்பியங்களில் குறிப்பிடத் தக்கது 
சீறாப்புராணம். கிறித்தவக் காப்பியங்களில் தேம்பாவணியும், 
இரட்சணிய யாத்திரிகமும் சிறப்புடையன. தற்காலத்தில் 
பாரதியின் பாஞ்சாலி சபதம் முதலானவும், பாரதிதாசனின் 
பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலானவும் காப்பிய 
வரிசையில் குறிப்பிடப்படுவன. முடியரசனின் பூங்கொடி, 
கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகா 
காவியம், புலவர் குழந்தையின் இராவண காவியம் ஆகியன 
பழந்தமிழ்க் காப்பிய  மரபில் பாடப்பட்டனவாகும். 
பஞ்சபாண்டவர்  வனவாசம், கர்ணன் சண்டை, 
நல்லதங்காள் கதை முதலான பல எண்ணற்ற கதைப் 
பாடல்கள் தற்காலக் காப்பிய வரிசையில் இடம் பெற்றுள்ளன.
பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்
    வடமொழியில்  மகாகாவியம்.  காவியம்  என்ற 
வகைமையையே பெருங்காப்பியம் - சிறுகாப்பியம் என்று 
தமிழில் குறிப்பிடுகின்றனர். வடமொழியில் இதிகாசங்களான 
இராமாயண - மகாபாரதக் கிளைக் கதைகளை எடுத்துக் 
கொண்டு, அவற்றைக் கலைத் தன்மையுடன் தண்டியலங்காரம் 
கூறும் இலக்கணப்படி பாடினர். இவையே மகாகாவியம் - 
காவியம்  எனப்பட்டன.  வடமொழி  தமிழ்க் 
காப்பியங்களுக்கிடையே  பெயரில்  இந்த ஒற்றுமை 
காணப்பட்டாலும், பாடு பொருளில் இருமொழிக் காப்பியங்களும் 
வேறுபடுகின்றன. தமிழில் எந்த ஒரு பெருங்காப்பியமோ 
அல்லது சிறு காப்பியமோ இதிகாசத் தழுவலாக இல்லை 
என்பது குறிப்பிடத் தக்கது.
1.3.1 பெருங்காப்பிய இலக்கணம்
    தமிழ்க் காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி 
பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை 
எனலாம். வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே 
முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் 
பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப் 
பாட்டியல், மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் 
இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.
    பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் 
பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் 
கூறுகிறது.
    பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறித் 
தொடங்கப் பட வேண்டும் என்பார் தண்டி; அவையடக்கம் 
இடம் பெற வேண்டும் என்பதை மாறன் அலங்காரம் 
வலியுறுத்தும். காப்பியப் பாடுபொருள் அறம், பொருள், இன்பம், 
வீடு என்னும் நாற்பொருள் தருவதாக அமைதல் வேண்டும் 
என்பது இலக்கண நூலார் அனைவரின் கருத்தாகும்.
    பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக மலை, கடல், 
நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் என்பனவற்றைத் 
தண்டி கூறுகிறார். தென்றலின் வருகை, ஆற்று வருணனைகளை 
மாறன் அலங்காரம் சுட்டும். நவநீதப் பாட்டியல் மாலை 
(பொழுது), குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் பற்றிய 
வருணனைகளைச் சேர்க்கும்.
    பெருங்காப்பிய நிகழ்ச்சிகளைப் பொது நிகழ்ச்சி, அரசியல் 
நிகழ்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம். திருமணம், 
பொழிலாடல், நீராடல், புதல்வர்ப் பேறு, புலவியிற் புலத்தல், 
கலவியில் கலத்தல் ஆகியவற்றைப் பொது நிகழ்வுகளாகத் 
தண்டி ஆசிரியர் குறிப்பிடுவார். மாறன் அலங்காரம் 
இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகியவற்றைச் 
சேர்க்கும். குலவரவு, உலகின் தோற்றம், ஊழின் இறுதி, 
தொன்னூற்று அறுவரது இயற்கை, வேதியர் ஒழுக்கம் இவை 
பற்றிப் பேச வேண்டும் என்பவற்றைப் புராணக் காப்பிய 
நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள் 
குறிப்பிடும்.
    பெருங்காப்பிய அரசியல் நிகழ்வுகளாக மந்திரம், தூது, 
செலவு, இகல் வென்றி, முடிசூடல் ஆகியவை தண்டி கூறுவன. 
இவற்றுடன் ஒற்றாடல், திறை கோடல் ஆகியவற்றை மாறன் 
அலங்காரம் சேர்க்கும்.
    சுவை, பாவம் (மெய்ப்பாடுகள்) காப்பியத்தில் இடம் பெற 
வேண்டும். அத்துடன் சந்தி, பாவிகம் ஆகிய கதைப் பின்னல் 
அமைதல் வேண்டும் என்பார் தண்டி. இதனைச் சற்று விரித்து 
வித்து, எண், துளி, கொடி, கருப்பம் எனப் பன்னிரு பாட்டியல் 
குறிப்பிடும்.
    பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம், இலம்பகம், 
பரிச்சேதம் ஆகியவை அமையும் என்பார் தண்டி. இவற்றுடன் 
படலம், காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம் 
குறிப்பிடும். வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகம் என்னும் 
பாவகை காப்பியம் பாடச் சிறந்தவை எனப் பன்னிரு பாட்டியல் 
குறிப்பிடும்.
    இவை தவிர வழிப்படுத்துதல், வழிப்பயணம், பந்தாடல், 
அசரீரி, சாபம் முதலான நிகழ்வுகளும்; சுடுகாடு, தீஎரி முதலான 
வருணனைக் கூறுகளும்; காதை, புராணம் ஆகிய கட்டமைப்புக் 
கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமைவதைக் 
காணலாம்.
● தமிழில் பெருங்காப்பியங்கள்
    தமிழில் பெருங்காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் 
என்ற வகையுள் அடங்குகின்றனர். அவை சிலப்பதிகாரம், 
மணிமேகலை,  சீவக சிந்தாமணி, வளையாபதி, 
குண்டலகேசி  ஆகியன.  இவற்றுள் சிலப்பதிகாரம் 
மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் 
என்பர். ஆனால் இந்தப் பாகுபாடுகள் எதன் அடிப்படையில் 
செய்யப்பட்டன. இப்பாகுபாடு சரிதானா? என்ற சிந்தனை 
அறிஞரிடையே இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. 
இங்கே குறிக்கப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் வரிசையில் 
குண்டலகேசியும், வளையாபதியும் கிடைக்கப் பெறவில்லை. 
அவை எப்படி இருந்தன. அவை பெருங்காப்பிய மரபில் பாடப் 
பட்டவைதானா? என்பது யாருக்கும் தெரியாது. நன்னூல் 
மயிலைநாதர் உரையில் (நூ.387) ‘ஐம்பெருங் காப்பியம்’ என்ற 
பெயர் காணப்படுகிறது. பின்னர் தோன்றிய தமிழ்விடுதூது 
‘கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்’ என்று குறிப்பிடுகின்றது. 
இந்த இரு நூல்களிலும் எவை ‘பஞ்ச காப்பியம்’ என்பது 
குறிக்கப் படவில்லை. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 
கந்தப்ப தேசிகர்,
    சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் 
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
1.3.2 சிறுகாப்பிய இலக்கணம்
    சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்சுட்டிய 
இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம் 
தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம் 
என்பார் தண்டி. தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் இவை 
அளவில் குறைந்திருப்பது தெரிய வருகிறது. பெருங்காப்பியச் 
சுருக்கமும் சிறுகாப்பியமாக  எண்ணப்  படுகின்றது. 
பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு 
தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை 
என்றே சொல்லலாம். இவை குறிப்பிட்ட ஒரு கருத்தை, 
பகுதியை மட்டுமே மையப் படுத்துகின்றன எனலாம்.
● சிறுகாப்பியங்கள்
    தமிழில் சிறுகாப்பியங்களை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று 
வகை செய்வர். இந்த வகைப்பாடும் கூடக் கருத்து 
வேறுபாடுகளுக்கு உரியதாக உள்ளது. யசோதர காவியம், 
நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், 
சூளாமணி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகத் தமிழ் 
இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.
 SOURCE-TAMIL VIRTUAL ACADEMY
1 comments:
i like this site. it is very useful and informative thank u.
Post a Comment